சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 10 இடங்களில் விபத்தை தடுக்க தானியங்கி ஒளிரும் மின்விளக்குகள்

*தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தகவல்

வேலூர் : சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் விபத்து நடக்கும் 10 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானியங்கி விபத்து தடுப்பு ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அடையாளம் கண்டு அங்கு சாலை மேம்பாலங்கள், இலகு ரக வாகனங்கள் சாலையை கடக்கும் வகையிலான சிறிய சாலை மேம்பாலங்கள் கட்டி வருகிறது.

அதேபோல் விபத்தை தவிர்க்கும் வாசகங்கள் அடங்கிய போர்டுகளையும், தேசிய நெடுஞ்சாலைகளில் வெண்ணிற பெயின்டால் வேகத்தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு 2 கி.மீ இடைவெளியில் பொது தொலை தொடர்பு மையம் ஏற்படுத்தி விபத்து பற்றிய தகவலை பொதுமக்களே சொல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் சாலை மின் விளக்கு தூண்களுடன் தானியங்கி புரொஜக்டரை இணைத்து அதன்மூலம் மாலையில் சாலை விளக்குகள் எரியத்தொடங்கும்போதே புரொஜக்டரும் தானாக இயங்கி அதன் மூலம் விபத்து தடுப்பு வாசகங்களையும், போக்குவரத்து விதிகளையும் நெடுஞ்சாலையில் பெரிய அளவில் படமாக ஒளிரச் செய்யும். அதாவது சாலை திருப்பம் என்பதை குறிக்கும் சிக்னல், சாலை சந்திப்பு குறித்த தகவல், வேகத்தடை குறித்த தகவல், குறுகிய சாலை வளைவு என்பதை குறிக்கும் தகவல், நகரப்பகுதி என்றால் வேகத்தை குறைக்கும் எச்சரிக்ைக வாசகங்கள் என அனைத்தும் சாலையில் ஒளிரும்.

இந்த ஏற்பாடு சென்னை- பெங்களூரு ேதசிய நெடுஞ்சாலையில் வாலாஜா டோல்பிளாசா தொடங்கி கிருஷ்ணகிரி டோல்பிளாசா வரை 148 கி.மீ தூரத்தில் தற்போது முதல்கட்டமாக அதிக விபத்து நடக்கும் 10 விபத்து மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் வேலூர் புதிய பஸ் நிலையம், அப்துல்லாபுரம் சாலை சந்திப்பு, எஸ்.என்.பாளையம் சாலை சந்திப்பு என 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுபோல் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து விபத்து ஏற்படும் இடங்களிலும் இந்த அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இந்த பகுதிகளில் நடைபெறும் விபத்துகளை தவிர்க்க முடியும் என்று தேசிய ெநடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 10 இடங்களில் விபத்தை தடுக்க தானியங்கி ஒளிரும் மின்விளக்குகள் appeared first on Dinakaran.

Related Stories: