பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 16 தாசில்தார்களுக்கு தண்டனை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு


சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்பத்தூர் முன்னாள், இன்னாள் தாசில்தார்கள் 16 பேருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும்படி அம்பத்தூர் தாசில்தாருக்கு கடந்த 2010ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததையடுத்து தாசில்தார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நீதிமன்ற உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. எனவே, 2010 ஆகஸ்ட் 30ம் தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேரும் நேரில் ஆஜராக உத்தவிட்டார். பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 16 தாசில்தார்களுக்கும் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டுமென்று கோரினார். இதையடுத்து நீதிபதிகள், 16 தாசில்தார்களுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஏப்ரல் 22க்கு தள்ளிவைத்தனர்.

The post பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 16 தாசில்தார்களுக்கு தண்டனை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: