தண்ணீர் பந்தல் அமைக்க கட்சிகளுக்கு அனுமதி: தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல்

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தண்ணீர் பந்தல் அமைக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளிக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வழக்கத்தைவிட அதிக அளவு வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் நேரத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க கோடை காலங்களில் அரசியல் கட்சிகள், பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க முடியாத நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகம் பக்கத்திலேயே தண்ணீர் பந்தலை அந்தந்த கட்சி சார்பில் அமைத்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். அதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிகளின் சார்பில் தலைவர்களின் படம், சின்னம் இடம் பெறாமல் தண்ணீர் பந்தல் அமைக்கவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும்.

The post தண்ணீர் பந்தல் அமைக்க கட்சிகளுக்கு அனுமதி: தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: