தனியார் ஊழியரிடம் 6.57 லட்சம் மோசடி

 

கிருஷ்ணகிரி, மார்ச் 25: கிருஷ்ணகிரி அருகே, குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ₹6.57லட்சம் மோசடி செய்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே வெங்கடேஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் மகள் சுந்தரம்பாள் (31). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ்அப் செயலிக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி, ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கிற்கு சுந்தரம்பாள் பல தவணைகளாக ₹6.57 லட்சம் பணத்தை செலுத்தினார். ஆனால் முதலீடு செய்த பணமும், லாபமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் வந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post தனியார் ஊழியரிடம் 6.57 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: