ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு

 

ஊத்துக்கோட்டை, மார்ச் 25: ஆந்திரா – தமிழகம் நதிநீர் ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜுலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இந்நிலையில் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், அனந்தேரி, கச்சூர் ஆகிய பகுதிகளில் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் சேதமடைந்து காணப்பட்டது.

இதையடுத்து ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் 4வது கிலோ மீட்டரில் இருந்து சேதமடைந்த கால்வாயை, ஆலப்பாக்கம் 10வது கிலோ மீட்டர் வரை என 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.24 கோடி செலவில் கால்வாயை சீரமைத்து சிமென்ட் கான்கிரீட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி கிருஷ்ணா நீர் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்பட்டு 3.5 டிஎம்சி தமிழகத்திற்கு கிடைத்தது. பின்னர் அம்மாத இறுதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு மிக்ஜாம் புயலில் பெய்த கன மழையால் கிருஷ்ணா கால்வாயில் நிரம்பியபடி தண்ணீர் சென்றது. இதனால் கால்வாயின் இருபுறமும் உள்ள சிமென்ட் கான்கிரீட் சரிந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் முதல் சிட்ரபாக்கம் வரை கிருஷ்ணா கால்வாயின் இருபுறமும் சிமென்ட் கான்கிரீட்டை சீரமைக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: