இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ல் ஒன்றிய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்,ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளை பாகிஸ்தான் குறைத்து கொண்டது.

ஒன்றிய அரசின் இந்த முடிவினால் இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தடையாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. காஷ்மீர் தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்த ஒரு தலைப்பட்சமான முடிவுகளை வாபஸ் பெற்றால்தான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் சுமூக நிலை உருவாகும் என்று அந்த நாடு தெரிவித்தது. பாகிஸ்தானின் வேண்டுகோள்களை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீர்,லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் நாட்டில் இருந்து பிரிக்க முடியாத பகுதிகளாகும்.

ஜம்மு காஷ்மீரின் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த ஆட்சி அமைப்புக்காக அரசியல் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் உள்விவகாரங்கள் சம்மந்தப்பட்டது என தெளிவுபடுத்தியது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் தனது வெளி நாட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதிதாக அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வௌியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் லண்டனில் நேற்று முன்தினம் கூறுகையில்,‘‘ இந்தியாவுடன் வர்த்தக உறவு வேண்டும் என்று பாகிஸ்தான் தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இந்தியாவுடன் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து பாகிஸ்தான் தீவிர பரிசீலனை செய்து வருகிறது’’ என்றார்.

The post இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை appeared first on Dinakaran.

Related Stories: