காலநிலை மாற்றத்தின் காரணமாக கிடைக்கும் நீரின் அளவு குறையும் போது உணவு உற்பத்தி குறையும்

 

ஊட்டி,மார்ச்24: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கோத்தகிரி லாங் வுட் சோலை பாதுகாப்புக்குழு மற்றும் கி ஸ்டோன் அமைப்பு சார்பில் எச்.ஆர் முத்தையா நினைவு மெட்ரிக் பள்ளியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜெயராமன் தலைமை வகித்தார்.பள்ளி தாளாளர் ராஜேஷ் சந்தர் முன்னிலை வகித்தார். கீழ்கோத்தகிரி வனச்சரகர் ராம்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.லாங் வுட் சோலை பாதுகாப்புக்குழு செயலர் கே.ஜே. ராஜு பேசும்போது, இந்த ஆண்டின் தண்ணீர் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான நீர் என்ற தலைப்பினை கருப்பொருளாக கொடுத்துள்ளது. இன்று உலகில் 100 லிட்டர் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொண்டால் நமது பயன்பாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு வெறும் ஐந்து சொட்டுகள் தான்.

இந்த குறைந்த அளவு தண்ணீருக்காக தான் உலகெங்கிலும் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.மூன்றாவது உலகப்போர் என்று வந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் காரணமாக கிடைக்கும் தண்ணீரின் அளவு குறையும்போது உணவு உற்பத்தி குறையும்.

இதனால் உணவு ஏழைகளுக்கு எட்டா கனியாகும். ஒவ்வொரு சொட்டு நீரும் உயிர் நீர் என்பதை மக்கள் புரிந்து கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்என்றார். கி ஸ்டோன் அமைப்பு சேர்ந்த களப்பணியாளர்கள் தண்ணீர் மாசு குறித்து மாணவர்களிடையே பரிசோதனை மூலமாகவும், விளையாட்டு மூலமாகவும் விளக்கி கூறினார்கள். முன்னதாக கி ஸ்டோன் அமைப்பின் களப்பணியாளர் விக்னேஷ் வரவேற்றார். முடிவில் மோனிஷா நன்றி கூறினார்.

The post காலநிலை மாற்றத்தின் காரணமாக கிடைக்கும் நீரின் அளவு குறையும் போது உணவு உற்பத்தி குறையும் appeared first on Dinakaran.

Related Stories: