வெயிலால் எலுமிச்சம் பழம் விலை கிடு, கிடு உயர்வு: 1 கிலோ ரூ.150க்கு விற்பனை

 

திருப்பூர், மார்ச் 23: திருப்பூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் எலுமிச்சம்பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், திருப்பூரில் தினமும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இருப்பதால் திருப்பூரில் கம்பங்கூழ், மோர், இளநீர், தர்பூசணி, முலாம் பழம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை சூடுபிடித்து வருகிறது. இதில் எலுமிச்சம்பழத்திற்கும் தனி இடம் உள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் இதன் தேவை அதிகரித்துள்ளது. திருப்பூருக்கு புளியங்குடி, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எலுமிச்சம் பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனாலும் புளியங்குடி பகுதியிலிருந்து தான் ஓரளவு வரத்து உள்ளது. மற்ற பகுதிகளிலிருந்து வரத்து மிகவும் குறைவாக உள்ளது. போதுமான அளவு வரத்து இல்லாத காரணத்தால் இதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக விலை உயர்வு இருந்து வருகிறது.

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் எண்ணிக்கை அளவில் ஒரு எலுமிச்சம்பழம் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில தினங்களில் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post வெயிலால் எலுமிச்சம் பழம் விலை கிடு, கிடு உயர்வு: 1 கிலோ ரூ.150க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: