டேங்க் ஆபரேட்டரை கொலை செய்த தொழிலாளி கைது

காவேரிப்பட்டணம், மார்ச் 23:காவேரிப்பட்டணம் அருகே டேங்க் ஆபரேட்டர் கொலை வழக்கில், தர்மபுரியில் தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கருக்கன்சாவடியைச் சேர்ந்தவர் வேலன்(42). இவர் எர்ரஅள்ளி ஊராட்சியில், தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், காவேரிப்பட்டணம்-பாலக்கோடு ரோடு அருகேயுள்ள முனியப்பன் கோயில் ஏரி அருகே, தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.

அப்போது, கருக்கன்சாவடியை சேர்ந்த தொழிலாளி முனியப்பன்(30) என்பவர், குடிபோதையில் வேலனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, முனியப்பன் மீன் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து, வேலனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வேலன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த முனியப்பன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முனியப்பனை தேடி வந்தனர். இதனிடையே, அவர் தர்மபுரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு, அங்கு சென்ற போலீசார், முனியப்பனை கைது செய்தனர். இதையடுத்து, நேற்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் முனியப்பனை ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

The post டேங்க் ஆபரேட்டரை கொலை செய்த தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: