100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 23: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, வேளாண்மைத்துறை சார்பாக, வண்ண பூச்செடிகளால் அலங்கரிக்கப்பட்ட 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம், தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் “என் ஓட்டு என் உரிமை” செல்ஃபி மையம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு பார்வையிட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கிய, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்கள் என அனைவரும், 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக, வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள், நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குறும்படங்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய பேரணிகள், கையெழுத்து இயக்கம், வண்ணக் கோலப்போட்டி, பேச்சுப் போட்டிகள், ஓவிய போட்டிகள், பாடல் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் வாக்களிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர், வேளாண்மை துறை சார்பாக 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம், தேர்தல் நடைபெறும் நாளை குறிப்பிடம் வகையில் வண்ண பூச்செடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். மேலும், “என் ஓட்டு என் உரிமை” குறித்த செல்ஃபி மையத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், சப் கலெக்டர் வந்தனாகார்க், தனி தாசில்தார் வெங்கடேசன், வேளாண்மை துறை இணை இயக்குநர் பச்சையப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜாமோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல், பெல்லாரம்பள்ளி கிராமத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பர்கூரில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், ஊத்தங்கரை தாலுகா ஆவாரங்குட்டை கிராமத்தில் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் நாடக கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டது. மேலும், ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கிருஷ்ணகிரி உழவர் சந்தை, ஓசூர் பஸ் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பஸ் நிலையங்கள், பள்ளிகளில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

The post 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: