நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் அனைத்து கட்சி கூட்டம்: டிஎஸ்பி பங்கேற்பு

 

ஊத்துக்கோட்டை, மார்ச் 23: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரியபாளையம் காவல் துறை சார்பில் அனைத்து கட்சியுடனான ஆலோசனை கூட்டம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமையில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் பெரியபாளையம் வெங்கடேசன், ஊத்துக்கோட்டை ஏழுமலை, வெங்கல் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது டிஎஸ்பி கணேஷ் குமார் பேசியதாவது: கட்சிக் கொடி கம்பங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும், சொந்த வீட்டில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றாலும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும். பிரசாரம் செய்பவர்கள் வாகனத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், மோட்டார் வாகன ஆய்வாளரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி வைக்க அனுமதி இல்லை, பாக்ஸ் மட்டுமே வைக்க வேண்டும்.

மேடை நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி வாங்க வேண்டும். வாக்கு சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் பூத் சிலிப் கொடுக்க வேண்டும், அதில் கட்சி சின்னம் எதுவும் இருக்கக் கூடாது. கூட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி பெறுபவர்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்படும். ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் கூட்டம் நடத்த 2 மணி நேரம் இடைவெளி வேண்டும். நட்சத்திர பேச்சாளர் வந்தாலும் இந்த அடிப்படையில்தான் நேரம் ஒதுக்கிக்கொடுக்கப்படும். எந்த கட்சிக்கூட்டம் நடந்தாலும் கூட்டம் முடிந்த உடனே கொடி மற்றும் பேனர்களை அகற்ற வேண்டும் என கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் அனைத்து கட்சி கூட்டம்: டிஎஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: