காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை செலவின பார்வையாளர்கள் ஆய்வு: ‘சி விஜில்’ செயலியில் புகார் தெரிவிக்கலாம் என தகவல்

காஞ்சிபுரம், மார்ச் 22: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தோஷ் சரண், மதுக்கர் ஆவேஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தேர்தல் விதிமீறல்கள் குறித்து ‘சி விஜில்’ செயலியில் புகார் தெரிவிக்கலாம் என்று தேர்தல் செலவின பார்வையாளர்கள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்களாக காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு மதுக்கர் ஆவேஸ், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு சந்தோஷ் சரண் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தேர்தல் செலவின பார்வையாளர்களான மதுக்கர் ஆவேஸ், சந்தோஷ் சரண் ஆகியோர் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதே கட்டுப்பாட்டு அறையில் அனைத்து செய்தி தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்வுகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுப்பாட்டு அறையினையும் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது, பொதுமக்கள் பதிவு செய்த புகார்கள் குறித்தும், அப்புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் பறக்கும் படையினரின் விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், தேர்தல் செலவின பார்வையார்கள் சந்தோஷ் சரண், மதுக்கர் ஆவேஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலின்போது, பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்க வருகை புரிந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க, தேர்தல் ஆணையம் எளிதான வகையில் ‘சி விஜில்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், தெரிவிக்கப்படும் அனைத்து புகார்கள், விதி மீறல்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உரிய முறையில் ஆவணங்கள் கொடுத்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வேட்பாளர் செலவினம் குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை பின்பற்ற வேண்டும். மேலும், நாங்கள் திடீரென அவ்வப்பொழுது வாகன தணிக்கையில் ஈடுபடுவோம். அப்போது, உரிய ஆவணங்களின்றி பணமோ, பொருட்களோ எடுத்து செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சியினரின் கூட்டங்களில் உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டால் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் விதி மீறல்கள் குறித்து பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி – சந்தோஷ் சரண் (99403 53325) மற்றும் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி – மதுக்கர் ஆவேஸ் (72005 55395) ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இப்புகார்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைகள் குறித்த விவரங்கள் அனைத்துமே வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை செலவின பார்வையாளர்கள் ஆய்வு: ‘சி விஜில்’ செயலியில் புகார் தெரிவிக்கலாம் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: