கமுதி அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

 

கமுதி, மார்ச் 21: கமுதி அருகே இராமசாமிபட்டி கிராமத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், யாகசாலை பூஜையுடன் முதல் கால பூஜை, வாஸ்து சாந்தி, பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பின்பு விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, மந்திர ஸ்தாபனம், மருந்து சாற்றுதல், மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. நேற்று காலை கோ பூஜை, துவாரா பூஜை, சூரிய பூஜை, தம்பதி பூஜை, நான்காம் கால பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார் வேத மந்திரங்கள், மங்கள இசை வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது. சந்தன மாரியம்மன் கோயில் விமான கலசம், ராஜகோபுரம் மூலஸ்தானம், விமான கோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் சந்தன மாரியம்மனுக்கு 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சேதுபதி, கவுன்சிலர்கள் மோகன்ராஜ், மகாலட்சுமி உட்பட ராமசாமிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான அய்யனார் குளம், தும்முசினம்பட்டி மறவர் பெருங்குடி, உடையநாதபுரம், கோரைப் பள்ளம், கிளாமரம், நீராவி போன்ற பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கமுதி அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: