திமுக கூட்டணியின் நம்பிக்‘கை’யான கோட்டை: காங்கிரசுக்கு 7 முறை ‘கை’ கொடுத்த சிவகங்கை.! 1967 முதல் 2019 வரை தொகுதியின் ஸ்பெஷல் ரிப்போர்ட்

காரைக்குடி: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறை வென்றுள்ளது. திமுக கூட்டணியின் நம்பிக்கையான கோட்டையாக இந்த தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 1967 முதல் 2019 வரை நடந்த தேர்தல்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 31வது தொகுதியாக சிவகங்கை உள்ளது. வரலாற்று பெருமை கொண்ட இந்த தொகுதியில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், ஆலங்குடி என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 764 வாக்காளர்கள் உள்ளனர். 346 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 36 மையங்கள் பதட்டமானவை. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 774 வாக்காளர்களும், 353 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இதில், 23 மையங்கள் பதட்டமானவை.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 44 வாக்காளர்கள், 334 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 மையங்கள் பதட்டமானவை. ஒன்று மிக பதட்டமானது. மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 913 வாக்காளர்கள், 324 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 44 மையங்கள் பதட்டமானவை. ஒன்று மிகவும் பதட்டதானது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 612 வாக்காளர்களும், 274 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இதில் 9 மையங்கள் பதட்டமானவை. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 899 வாக்காளர்களும், 242 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. 19 மையங்கள் பதட்டமானவை. 6 சட்டமன்ற தொகுதிகளில் 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர். 1873 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 160 மையங்கள் பதட்டமானவை. 2 மையங்கள் மிகவும் பதட்டமானவை.

1967 முதல் வெற்றி பெற்றவர்கள்

இந்த தொகுதியை பொறுத்தவரை கடந்த 1967 முதல் 1971 வரையும், 1971 முதல் 77 வரை திமுகவைச் சேர்ந்த தா.கிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1977 முதல் 1980 வரை அதிமுகவைச் சேர்ந்த பெ.தியாகராஜன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1980 முதல் 1984 வரையும், 1984 முதல் 1989 வரையும், 1989 முதல் 1991 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.சுவாமிநாதன் எம்பியாக இருந்தார். 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பியாக இருந்தார். மேலும், 1996 முதல் 1998 வரையும், 1998 முதல் 1999 வரையும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரம் எம்.பியாக இருந்தார். 1999 முதல் 2004 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் எம்.பியாக இருந்தார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் எம்.பியாக இருந்தார். 2014 முதல் 2019 வரை அதிமுகவைச் சேர்ந்த செந்தில்நாதன் எம்.பியாக இருந்தார். 2019ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி ப.சிதம்பரம் வெற்றி பெற்று எம்பியாக இருக்கிறார்.

3.32 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற கார்த்தி ப.சிதம்பரம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்றார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜக சார்பில் நின்ற எச்.ராஜா 2 லட்சத்து 33 ஆயிரத்து 860 வாக்குகள் பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட தேர்போகி பாண்டி 1 லட்சத்து 22 ஆயிரத்து 534 வாக்குகள் பெற்றார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியை பொறுத்தவரை 1967 முதல் 2024 வரை திமுக 2 முறையும், காங்கிரஸ் 7 முறை, தாமக 2 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை போலவே இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதனால், இம்முறையும் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என பொதுமக்கள் அடித்துக் கூறுகின்றனர்.

The post திமுக கூட்டணியின் நம்பிக்‘கை’யான கோட்டை: காங்கிரசுக்கு 7 முறை ‘கை’ கொடுத்த சிவகங்கை.! 1967 முதல் 2019 வரை தொகுதியின் ஸ்பெஷல் ரிப்போர்ட் appeared first on Dinakaran.

Related Stories: