சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து சேலம், அயோத்தி, ஜெய்ப்பூர், அகமதாபாத் செல்லும் 4 விமானங்களும், அதேபோன்று அங்கிருந்து சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்களும் என 8 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து சேலத்திற்கு தனியார் பயணிகள் விமானம் வழக்கமாக காலை 11.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். பின்னர் அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு பகல் 1.50 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும். இந்த விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு தனியார் பயணிகள் விமானம் சென்னையில் இருந்து காலை 6.20 மணிக்கு ஜெய்ப்பூருக்கும், பகல் 12.50 மணிக்கு அயோத்திக்கும், இரவு 10.20 மணிக்கு அகமதாபாத்துக்கும் இயக்கப்படும். அதேபோன்று அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6.40 மணிக்கும், ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு பகல் 11.55 மணிக்கும், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 3.20 மணிக்கும் அந்த 3 விமானங்களும் சென்னைக்கு வந்து சேரும். இந்த விமான சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் விமானத்தையும் சேர்த்து மொத்தம் 8 விமான சேவைகள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிர்வாக காரணங்களால் இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் சேலம் விமான நிலையம் அருகே பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜ பொதுக்கூட்டம் இன்று பகலில் நடப்பதால், பாதுகாப்பு கருதி சேலம் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த விமானங்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ள பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

The post சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: