திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது: வைகோ பேட்டி

சென்னை: திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக செல்வராஜும், திருப்பூர் தொகுதி வேட்பாளராக சுப்பராயனும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர். திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ, முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சுப்பராயன், வை.செல்வராஜ் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சரிடம் வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றபோது முத்தரசன், வைகோ உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்; தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்து கட்சிக்கும் பொருந்தும்; ஆளுங்கட்சிக்கும்தான். பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறும் வகையில் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறார்.

கோவையில் மோடியின் பேரணியில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது விதிமீறல். பிரதமரின் பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது பற்றி புகார் அளிக்கப்படும். மின்சார நிலை கட்டணம் தொடர்பாக தேர்தல் முடிந்தபிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ; மோடி எத்தனை முறை வந்தாலும் திராவிட பிடியில் இருந்து தமிழ்நாட்டை அபகரிக்க முடியாது. அளவுக்கு அதிகமான பொய்களை நாட்டின் பிரதமர் அள்ளி வீசுகிறார். திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாபெரும் வெற்றி பெறுவார் இவ்வாறு கூறினார்.

The post திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: