தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு!!

ராய்ப்பூர் : ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பாஜவின் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டில் 2 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்ததால் 2019ம் ஆண்டு தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2021ம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, கூடுதல் பொறுப்பாக தமிழிசைக்கு புதுச்சேரி வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் போட்டியிடுவதை அடுத்து, அவர் வகித்த தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழிசை வகித்த புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் இருமுறை வென்று மக்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களான இல.கணேசன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தமிழகத்தில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட 3வது ஆளுநர் என்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: