அரசியல் கட்சியினர், அச்சகத்தினர், வங்கியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்க கூட்டம்: மாவட்ட தேர்தல் அலுவலர் பங்கேற்பு

திருவள்ளூர்: நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கான பொதுவான நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், உதவி பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) சத்யபிரசாத், வெங்கட்ராமன் (பொது) உதவி ஆணையர் (கலால்), ரங்கராஜன், தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கலெக்டர் பேசியதாது: பல்வேறு சாதி, இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ ஒருவருக்கு ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் வண்ணம் அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்தவொரு கட்சியோ வேட்பாளரோ ஈடுபடக்கூடாது. பிற கட்சிகள் மீது விமர்சனம் மேற்கொள்ளும் போது, அக்கட்சிகளின் கொள்கைகள், செயல்திட்டங்கள், கடந்த காலச் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனமாக இருக்க வேண்டும். பிற கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொதுவாழ்க்கையோடு தொடர்பற்ற சொந்த வாழ்க்கையைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். பிற கட்சியினர் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

தேர்தல் பிரசாரக் களமாக, மசூதி, சர்ச் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல். வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டர் சுற்றெல்லைக்குள் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருதல், தேர்தல் பரப்புரைக்கான நிறைவு நேரத்திலிருந்து வாக்குப் பதிவு முடிவடைவது வரையிலான 48 மணி நேரத்திற்குள் பொதுக் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற முறைகேடான நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் அரசு நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்துதல், தேர்தல் நேரங்களில், அரசு ஊடகத் துறையின் வாயிலாக ஒருதலைப்பட்சமான அரசியல் செய்திகளை மட்டும் சேசுரிக்கச் செய்வதும், அரசின் வாய்ப்பு வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பி.கே.நாகராஜ், பாஜக மாவட்ட தலைவர் எம்.அஸ்வின் என்கிற ராஜ சிம்மகேந்திரா, ஆர்.கருணாகரன், அதிமுக நிர்வாகிகள் ச.ஞானகுமார், எழிலரசன், விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சி சுந்தர்ராஜன், பகுஜன் சமாதி கட்சி நிர்வாகி அம்பேத் ஆனந்த் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

* வங்கியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வங்கியாளர்களுடன் பொதுவான நடத்தை விதிமுறைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். தேர்தல் செயல்பாட்டின் போது எந்தவொரு தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுப்பது குறித்து அனைத்து வங்கிகளையும் தினசரி அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2 மாதங்களாக அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் இருந்து வழக்கத்திற்கு மாறான மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல் அல்லது வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால் கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

* அச்சகத்தினருக்கான நடத்தை விதிமுறைகள்

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு அச்சக வெளியிட்டாளர்களுக்கான பொதுவான நடத்தை விதிமுறைகள் தொடர்பான திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ அல்லது அவர்களது ஆதரவாளர்களோ அச்சக வெளியீட்டாளர்களை அணுகி தேர்தல் பிரச்சாரத்திற்காக வாக்காளர்களை கவரும் வகையில் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் ஆகியனவற்றை அச்சடிக்க வாய்ப்புள்ளது. அத்தகைய துண்டு பிரசுரங்கள் மற்றும் போஸ்டர்களில் கட்டாயம் அச்சகத்தின் பெயரும், முகவரியுடன் எவ்வளவு எண்ணிக்கையிலான அச்சடிக்கப்படுகின்றன என்ற விபரம் இடம்பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு நபரும், அச்சகத்தின் விபரம் இல்லாமல் துண்டுபிரசுரங்கள், போஸ்டர்கள் வெளியிட அனுமதியில்லை.

அவ்வாறு தேர்தல் பிரசுரங்கள் வெளியிடும் அனைத்து நபரும் இச்சட்டப்பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டவாறு இரண்டு உள்ளூர் சாட்சிகளின் கையொப்பமிடப்பட்ட உறுதிமொழி படிவத்தினை கட்டாயம் அச்சகத்தில் தாக்கல் செய்திடல் வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட உறுதிமொழி படிவத்துடன், வெளியிடப்பட்டுள்ள பிரசுரங்களின் 4 நகலுடன் மூன்று தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட அச்சக வெளியீட்டாளர்கள் மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கட்டாயம் அறிக்கை தாக்கல் செய்திட வேண்டும்.
இச்சட்டப்படி, அவ்வாறு வெளியிடப்படும் தேர்தல் பிரச்சாரங்கள் நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அவை அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமாக கருத்தில் கொள்ளப்படும். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சி ஆதரவாளர்களாலோ அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்களாலோ வாக்காளர்களை கவரும் விதத்தில் விளம்பரங்கள் பத்திரிக்கை, ஊடகங்களில் வெளியிடப்படலாம்.

அவ்வாறான விளம்பரங்களும் இந்திய பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 77(1)ன்படி கணக்கில் கொள்ளப்பட்டு வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். எனவே ஆதரவாளர்களால் கொடுக்கப்படும் விளம்பரங்களை பொறுத்து வேட்பாளர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியினையோ அல்லது வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விபரத்தை பிரசுரிப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் சம்மதமின்றியோ அல்லது வேட்பாளரின் சம்மதமின்றியோ விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டால் அவை இந்திய தண்டனை சட்டப்பிரிவு 171 எச் பிரிவை மீறியதாக கருதப்பட்டு அந்த அச்சக உரிமையாளரின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும். நடத்தை விதி அமலில் உள்ள காலங்களில் பொது இடங்களிலும், நகராட்சி பகுதியிலும் போர்டுகள், தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் வைத்திட அனுமதியில்லை. இந்தச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.2 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்தோ விதிக்கப்படும். எனவே தேர்தல் ஆணைய விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அரசியல் கட்சியினர், அச்சகத்தினர், வங்கியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்க கூட்டம்: மாவட்ட தேர்தல் அலுவலர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: