கட்டிடத்துக்குள் புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடத்தை பயன்படுத்துவது எப்படி? ஆய்வு செய்ய ஆலோசனை நிறுவனம் நியமிக்க டெண்டர்

சென்னை: கட்டிடத் துக்குள் புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் திட்டத் துக்காக திருமங்கலத்தில் மேம்பாலம் அருகே 12 மாடி கட்டிடத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்தப் பணிகளை 2026 இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா போன்ற நாடுகளில் இருப்பது போன்று சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் வழியாக மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, திருமங்கலம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியதாவது: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் 5வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் தடத்தின் ஒரு பகுதியாக திருமங்கலத்தில் மேம்பாலம் அருகே 12 மாடி கட்டிடத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் 3வது தளம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக திருமங்கலத்தில் மேம்பாலம் அருகே 3 வீடுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 12 மாடி கட்டிடத்தை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்படும். இதற்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 12 மாடி கட்டிடத்தில் 4வது தளத்தில் மெட்ரோ ரயில்நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மெட்ரோ அலுவலகம், வணிக வளாகம் போன்றவையும் இடம் பெறவுள்ளது. இதுதவிர கோயம்பேடு, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. அதேபோல் இந்த 3 இடங்களில் நிலையங்களை கட்டுவதற்கான செலவு 2ம் கட்ட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசிடம் நிதி கோரப்படும். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கட்டிடத்துக்குள் புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடத்தை பயன்படுத்துவது எப்படி? ஆய்வு செய்ய ஆலோசனை நிறுவனம் நியமிக்க டெண்டர் appeared first on Dinakaran.

Related Stories: