மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: 22ம் தேதி தேரோட்டம்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பங்குனி மாதம் ஒவ்வொரு கோயில்களிலும் பெருவிழாவாக நடப்பது வழக்கம். சென்னையை பொறுத்தவரை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெறும். 4 மாட வீதியில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதி முழுவதும் சூழ்ந்து நிற்பார்கள். இன்று காலை கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்குகிறது.

தொடர்ந்து, 7ம் நாளான 22ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. கொடியேற்றம் தொடங்கிய நாளில் இருந்து 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம், ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறும். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 10 நாட்களுக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று கூட்ட நெரிசலை தடுக்கவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுவர்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. விழாவில் இன்று காலை 7-7.30 மணிக்கு கொடியேற்றம், இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சி, நாளை காலை 8.30 மணிக்கு வெள்ளி சூரிய வட்டம், இரவு 9 மணிக்கு வெள்ளி சந்திர வட்டம், கிளி வாகனம், அன்ன வாகனத்தில் உலா, 18ம்தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி காட்சி, இரவு 9 மணிக்கு வெள்ளி பூத வாகனம், பூதகி வாகனம், தாரகாசுர வாகனத்தில் உலா, 19ம் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி சிங்க வாகனம்,

இரவு 9 மணிக்கு நாக வாகனம், காமதேனு வாகனம், ஆடு வாகனம், புலி வாகனத்தில் உலா, 20ம் தேதி காலை 8.30 மணிக்கு சவுடல் விமானம், 11.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன காட்சி, 21ம் தேதி பல்லக்கு விழா, இரவு 10 மணிக்கு ஐந்திருமேனிகள் யானை வாகனங்கள் உலா, 22ம் தேதிகாலை 9 மணிக்கு தேரோட்டம், 23ம் தேதி மதியம் 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு காட்சி, சந்திர சேகரர் பார்வேட்டை விழா, 24ம் தேதி ஐந்திருமேனிகள் விழா, மாலை 6.30 மணிக்கு இறைவன் இரவலர் திருக்கோல விழா, 25ம் தேதி திருக்கூத்த பெருமான் காட்சி 7.45 மணிக்கு திருக்கல்யாணம், 8.15க்கு கொடியிறக்கம்.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: 22ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: