எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரத்தம், எலும்பு மஜ்ஜை மாற்று பிரத்தியேக சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 2023-24ம் ஆண்டு மாநில நிதி அறிக்கையில் ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு உயர்சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் விடுதியுடன் கூடிய செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு நோய்களுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவசரகால நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவசரகால மருத்துவத்துறையில் மட்டும், சராசரியாக மாதாந்திரம் 6000 முதல் 7000 நோயாளிகள் அவசர சிகிச்சை தேவைகளுக்காக வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள நர்சிங் பள்ளி விடுதி கட்டிடம் 1965ம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், இந்த பாழடைந்த கட்டிடங்கள் ஆக்கிரமிப்பிற்கு பாதுகாப்பற்றவை என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. எனவே இக்கட்டிடத்தை தகர்த்து ரூ.112 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உயர்சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள பழைய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காலி நிலத்தில் ரூ.22 கோடி மதிப்பில் செவிலியர் மாணவர்கள் தங்குவதற்கு விடுதி வசதியும், ரூ.13 கோடி மதிப்பில் புதிய நர்சிங் பள்ளியும் அமைக்கப்படும். தமிழ்நாடு குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்து நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதில் தேசிய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கின்றது. 2020ம் ஆண்டு மாதிரி பதிவு முறையின் படி தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் ஒரு ஆயிரம் பிறப்புகளுக்கு 13 ஆக தற்பொழுது குறைக்கப்பட்டது என்று மாதிரி பதிவு அறிக்கை தெரிவிக்கின்றது.

மாநிலத்தில், குழந்தை இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்காக, 2022-23ம் ஆண்டில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை மரபியல் சார்ந்த நோய்கள் மற்றும் மரபுசார் பிற அறியவகை நோய்களுக்கான ’ஒப்புயர்வு மையங்களாக’ உயர்த்திட முதற்கட்டமாக ரூ.8.91 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இம்மருத்துவமனையில் உள்ள மரபணு ஆய்வகத்தை தரம் உயர்த்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மரபணு நோய் மற்றும் மரபுசார் அரிய வகை நோய்களுக்கான பரிசோதனைகள், மற்றும் புற்றுநோய்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும், மரபியல் நோய் மற்றும் மரபுசார் அரிய வகை நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரத்தம், எலும்பு மஜ்ஜை மாற்று பிரத்தியேக சிகிச்சை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: