செய்யூர் தாலுகாவில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்: மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை

செய்யூர், மார்ச் 15: செய்யூர் தாலுகா பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யூர் தாலுகா. ஒரு காலத்தில் மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்டிருந்த செய்யூர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்டது. இந்த தாலுகாவில் லத்தூர், சித்தாமூர் என 2 ஒன்றியங்களில், 84 ஊராட்சிகள் உள்ளன. செய்யூர் தாலுகாவை பொறுத்தவரையில் பொரும்பாலானோர் பட்டப்படிப்பு முடித்து வெளியூர் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருவது சிறப்பு அம்சம்.
இத்தகைய கல்வியில் சிறப்பு வாய்ந்த இந்த தாலுகாவில் பொறியியல் கல்லூரியோ, கலைக்கல்லூரியோ இல்லாதது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட ஆண்டுகாலமாக இந்த தாலுகா பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கல்லூரி அமைவதற்கான நடவடிக்கை இதுநாள் வரையில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த தாலுகாவில் கல்லூரிகள் இல்லாததால் இந்த வட்டாரத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் வரையில் நீண்ட பயணம் மேற்கொண்டு கல்லூரிகளுக்கு சென்று வரும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. மேலும், சென்னை போன்ற பெரும் நகரங்களில் உள்ள கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்காக சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுராந்தகம் செல்ல வேண்டியநிலை உள்ளது. மதுராந்தகத்தில் அரசு கலை கல்லூரி இல்லாததால் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு வரையில் சென்று கல்வி பயின்று வருகிறோம்.

கல்லூரி நீண்ட தொலைவில் உள்ளதால் மாணவிகளை பெற்றோர் பலர் கல்லூரிக்கு அனுப்பவே அஞ்சுகின்றனர். மாவட்டத்திலே செய்யூர் தாலுகாவில் தான் படித்தவர்கள் அதிகம். இப்படி இருக்க வளர்ந்து வரும் இந்த தாலுகாவில் இதுவரையில் ஒரு கல்லூரி கூட ஏற்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மேலும், பட்டப்படிப்பு படிக்க விரும்பும் பல மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி தாலுகா பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post செய்யூர் தாலுகாவில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்: மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: