வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 48 முதல்நிலை கோயில்களில் இன்று முதல் இலவச நீர்மோர்: கபாலீஸ்வரர் கோயிலில் தொடக்கம், அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: நீர்மோர் வழங்கும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைக்கப்போவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தையால்பேட்டை, இப்ராஹிம் தெருவில் ரூ.96.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உருது நடுநலைப்பள்ளியின் வகுப்பறைகளை அமைச்சர் சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன் நேற்று திறந்து வைத்தனர்.

அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் ரூ.2.8 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டினர். 56வது வட்டம் பி.ஆர்.கார்டன், பிராட்வே பகுதியில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை திறந்து வைத்தனர். 55வது வட்டம் அப்பு மேஸ்திரி தெருவில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தனர்.

பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகமானதால் பக்தர்கள் வசதிக்காக கருங்கல் பதித்த தரையோடு இருக்கக்கூடிய கோயில்களில் கயிறு மேட் ஏற்படுத்தவும், பெருமளவு பக்தர்கள் வரும் கோயில்களில் நீர் மோர் தரவும் ஏற்பாடு செய்துள்ளோம். முதற்கட்டமாக நாளை (இன்று) முதல் 48 முதல் நிலை கோயில்களில் நீர்மோர் பக்தர்களுக்கு இலவசமாக தரப்பட இருக்கிறது. கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறோம்.

வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம். 2019ம் ஆண்டில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான பின் தயாநிதி மாறன் கால் படாத இடமே மத்திய சென்னையில் இல்லை என்றார். இதில் மேயர் பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, பகுதிச் செயலாளர் ராஜசேகர் முரளி, மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு உள்பட பலர் பங்கேற்றனர்.

The post வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 48 முதல்நிலை கோயில்களில் இன்று முதல் இலவச நீர்மோர்: கபாலீஸ்வரர் கோயிலில் தொடக்கம், அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: