உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்

உடுமலை : உடுமலை நகராட்சியின் சிறப்புக் கூட்டம் நகர்மன்ற தலைவர் மத்தீன் தலைமையிலும், நகராட்சி ஆணையர் பாலமுருகன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் கலைராஜன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். நகராட்சியின் 2023 – 24ம் நிதி ஆண்டிற்கான வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நிதி மற்றும் ஆரம்பக் கல்வி நிதிக்கான திருத்திய வரவு செலவு திட்ட மதிப்பீடு, 2024 – 25ம் நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் வழங்கல், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நிதி, ஆரம்பக் கல்வி நிதிக்கான உத்தேச வரவு செலவு திட்டம் மதிப்பீடு செய்து மன்றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட்டது.

நகராட்சி பட்ஜெட்டில் மொத்த வருவாய் ரூ.7 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 300, மொத்த செலவுத்தொகையாக ரூ.7 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது. உபரி நிதி உள்ளதாகவும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.நகர்மன்ற தலைவர் மத்தீன் தாக்கல் செய்த நகராட்சி நிலை அறிக்கையில்,“நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் வார்டுகளில் நடைபெறும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ரூ.12 லட்சம் என ரூ. 3 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கீடு, பழைய நகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் தளி எத்தலப்ப நாயக்கர் திருவுருவச்சிலை அருகே மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான பழைய தேர் வைக்கப்படும்.

அந்த வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்க ரூ.15 லட்சம் நிதிஒதுக்கீடு, நகராட்சி அலுவலகம் மற்றும் நகரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளை பராமரிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு, வணிக வளாகங்களை பராமரிப்பு பணிகள் செய்து மேம்படுத்தும் பணிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு, அனைத்து வார்டு பகுதிகளிலும் ஏற்கனவே உள்ள மழை நீர் வடிகால் கால்வாய்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சாலை மின் மயானம் அருகே நகராட்சிக்கு சொந்தமான மயான பூமி, கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ளது. அந்த மயான வளாகத்தில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.சிறப்புக்கூட்டத்தில், நகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, புதிய ஆணையராக பொறுப்பேற்று முதல் கூட்டத்தில் கலந்துகொண்ட பாலமுருகனுக்கு நகரமன்ற தலைவர் மத்துன் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு

உடுமலை 33-வது வார்டு உறுப்பினரும், நகர திமுக செயலாளருமான வேலுச்சாமி, ஒன்றிய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ மக்கள் குடியுரிமைச் சட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும், ஒன்றிய அரசின் இச்சட்டத்தை இம்மன்றம் கண்டிப்பதோடு, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரி தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு, உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு கொடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: