மின் விளக்கு, சுகாதார பணிகள் நடந்ததாக சென்னகுப்பம் ஊராட்சியில் ரூ.20 கோடி நிதி கையாடல்: ஊராட்சி உதவி இயக்குநர் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: சென்னகுப்பம் ஊராட்சியில், மின் விளக்கு, சுகாதார பணிகள் உள்ளிட்ட பணிகள் நடந்ததாக கணக்கு காட்டி, ரூ.20 கோடி நிதியினை முன்னாள் ஊராட்சி செயலாளர் கையாடல் செய்ததாக, ஊராட்சி உதவி இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், சென்னகுப்பம் ஊராட்சியில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால், இந்த ஊராட்சிக்கு தொழில்வரி, கட்டிட வரி என ஆண்டிற்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும், சென்னைக்கு அருகாமையில் இந்த ஊராட்சி அமைந்துள்ளது. இதனால், இந்த ஊராட்சியில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டுமனைகள் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் பல லட்சம் ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த நிதி மூலம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்யபட்டு வருகிறது. தற்போது, சென்னகுப்பம் ஊராட்சியில் சுமார் ரூ.20 கோடி நிதியினை விதிமீறி கையாடல் செய்யபட்டுள்ளதாக அப்பகுதி மக்களின் சார்பில் அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் சென்றுள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு முன்னாள் ஊராட்சி செயலர் ராஜேஷ், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கோப்புகளை மாவட்ட அலுவலகத்திற்கு கொண்டுவர சொல்லி ஆய்வு செய்துள்ளார். இதில், ஊராட்சி நிதியில் கையாடல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: குன்றத்தூர் ஒன்றியத்தில் அதிக வருவாய் கிடைக்கும் ஊராட்சிகளில் சென்னகுப்பம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளில் மின் விளக்கு அமைத்தல், மின்சாதன பராமரிப்பு, சோலார் விளக்கு, சுகாதார பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ததாக கோடிக்கணக்கில் கையாடல் செய்யபட்டுள்ளது. ஆனால், இந்த ஊராட்சியில் பல ஆண்டுகளாக கால்வாய், சாலை, குளம் சீரமைக்காமல் உள்ளது. மேலும், மின் விளக்கு அமைத்தல், பராமரிப்பு என பல லட்சங்கள் சுருட்டி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுக்கப்பட்டும், அதிகாரிகள் கையூட்டு பெற்றுகொண்டு நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே, சென்னகுப்பம் ஊராட்சியில் கலெக்டரின் நேரடியில் ஊராட்சி கணக்குகளை தணிக்கை செய்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

* தணிக்கை செய்ய கமிஷன்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வருவாய் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது. ஊராட்சி நிதி குறித்த வரவு, செலவு குறித்த தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒருசில செலவினங்களுக்கு முறையாக பதிவேடு வைக்கபடாமல் உள்ளது. இதனை கண்டுகொள்ளாமல் இருக்க தணிக்கை செய்யும் அதிகாரிக்கு 10 சதவீதம் கமிஷன் தொகையினை வழங்கி ஊராட்சி செயலர்கள் சரிகட்டி வருகின்றனர். இதேபோல் சென்னகுப்பம் ஊராட்சியில் தணிக்கை செய்த அதிகாரிக்கு லட்சங்கள் வழங்கபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post மின் விளக்கு, சுகாதார பணிகள் நடந்ததாக சென்னகுப்பம் ஊராட்சியில் ரூ.20 கோடி நிதி கையாடல்: ஊராட்சி உதவி இயக்குநர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: