குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விசிக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடெங்கும் அமல்படுத்தி இருப்பதாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டது.

முன்னதாக, இந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் 2019ல் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல் இந்த சட்டத்திற்கு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து விசிக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு:

மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும், இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜ அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: