மக்களை தேடி மருத்துவம் கிராமப்புறங்களில் பெரும் பயன்.. சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர வேண்டும் : ஜெயரஞ்சன்

சென்னை :தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். சென்னையில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”தமிழ்நாடு அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட 11 திட்டங்கள் குறித்து ஆய்வறிக்கை தயாரித்தோம். நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள் அவர்களுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். ஆண்டுதோறும் அதிகரிக்கும் வெப்பநிலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்பித்துள்ளோம்.

உற்பத்தி, போக்குவரத்தால் ஏற்படும் மாசு பாதிப்பை குறைப்பது குறித்தும் ஆய்வு செய்தோம். சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி என்பது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். காடுகள் பச்சை பாலைவனங்களாக மாறுவதை தடுப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆய்வறிக்கை கொடுத்துள்ளோம். காலை உணவு திட்டத்தால் பள்ளி மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல மறுக்கும் நிலை தற்போது மாறியுள்ளது. காலை உணவு திட்டத்தால் முன்கூட்டியே பள்ளிக்கு மாணவர்கள் வருகின்றனர். குழந்தைகள் காலை உணவை விரும்பி உட்கொள்வதாக பெற்றோர்களும், ஆசிரியர்கள் சொல்கிறார்கள். காலை உணவுத் திட்டம் மாணவர்களிடம் மட்டுமல்லாது பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காலை உணவு திட்டத்தால் வேலைக்கு செல்லும் பெற்றோரின் கவலை குறைந்துள்ளது. காலை உணவு திட்டம் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம். காலை உணவு திட்டத்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரித்துள்ளதா என மருத்துவர்களை கொண்டு ஆய்வுசெய்தோம். பழங்குடியினர் திட்டங்களில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம், கிராமப்புறத்தில் உள்ளோர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வதை 50% வரை தடுத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் கிராமப்புறங்களில் பெரும் பயன் அளிக்கிறது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பட்டியலின, மலைவாழ் மக்கள், பெண்கள், கிராமப்புற மக்களிடம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பலனை அளித்துள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்களை தேடி மருத்துவம் கிராமப்புறங்களில் பெரும் பயன்.. சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர வேண்டும் : ஜெயரஞ்சன் appeared first on Dinakaran.

Related Stories: