பிலாவிடுதி ஊராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் சேதமடைந்த குடிநீர் தொட்டி

*விரைவில் சீரமைக்க கோரிக்கை

கறம்பக்குடி : கறம்பக்குடி அருகே பிலாவிடுதி ஊராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் குடிநீர் தொட்டியை விரைந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பிலாவிடுதி ஊராட்சி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இப்பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்ட தற்போது வரை செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக செடிகள் முளைத்து நான்கு பக்கமும் பழுதடைந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

இந்த குடிநீர் தொட்டி அருகிலேயே உள்ள குடும்பத்தினர் பெரிதும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால் எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்து ஏற்படுத்தக் கூடிய நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலமுறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தும் எந்தவித பயனும் இல்லை.

இந்த நீர் தேக்க தொட்டி அருகே அரசு நடுநிலைப்பள்ளியும் அமைந்துள்ளதால் அங்கு கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பயத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே அவர்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை இடித்து புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post பிலாவிடுதி ஊராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் சேதமடைந்த குடிநீர் தொட்டி appeared first on Dinakaran.

Related Stories: