இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.131.15 கோடி செலவில் 20 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15 கோயில்களில் ரூ.29.27 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விருந்து மண்டபம், காதுகுத்து மண்டபம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 14 கோயில்களில் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகம், திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.33.66 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, பேருந்து நிலைய அபிவிருத்தி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபம் கட்டும் பணிகள், திண்டுக்கல் பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் நூலகம் கட்டும் பணிகள் மற்றும் பழனி,

தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி, ஈரோடு மாவட்டம், பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்டும் பணி, கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் ரூ.5.06 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, திருவாரூர் மாவட்டம், மாப்பிள்ளைக்குப்பம், கைலாச நாதசுவாமி கோயிலில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்டும் பணி, சென்னை மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி என மொத்தம் ரூ.131.15 கோடி மதிப்பீட்டிலான 20 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டம், கள்ளழகர் கோயிலில் ரூ.14.14 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விருந்து மண்டபம், காதுகுத்து மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், வணிக வளாகம், சுந்தரராஜ உயர்நிலைப் பள்ளி அலுவலகம் மற்றும் நூலகம், அழகர் கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சஷ்டி மண்டபம் என மொத்தம் ரூ.29.27 கோடி செலவிலான 17 முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.131.15 கோடி செலவில் 20 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: