மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சார்பில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடைபெற்ற
மகா சிவராத்திரி பெருவிழா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 7 திருக்கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா இன்று (08.03.2024) ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் கபாலீசுவரர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி பெருவிழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி மகாசிவராத்திரி விழா 08.03.2024 மாலை 6 மணி முதல் 09.03.2024 காலை 6 மணி வரை சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், பேரூர், அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 7 திருக்கோயில்களில் சார்பில் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாய் கொண்டாடப்படுகின்றது.

மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக மங்கள இசை மற்றும் திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முனைவர் சிவ சதீஷ்குமார் அவர்களின் சிவன் அருள் என்னும் ஆன்மிக சொற்பொழிவும், கதக் நடனம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, சிவன் பக்தி பாடல்கள், மார்க்கண்டேய சரித்திரம் எனும் ஹரிகதை, அன்பே சிவம் எனும் தலைப்பில் நகைக்சுவை நாவலர் மோகனசுந்தரம் அவர்களின் சொற்பொழிவு, தெய்வ சேக்கிழார் நாடகம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம், பறை இசை, தப்பாட்டம், தாளவாத்திய சங்கமம், பக்தி திரை இசை பாடல்கள் நிகழ்ச்சி, கயிலாய வாத்தியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மகா சிவராத்திரி தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க. வீ. முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி. ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், பொ. ஜெயராமன், கோ. செ. மங்கையர்க்கரசி, கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, பொ.க.கவெனிதா திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சார்பில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: