மகா சிவராத்திரி.. சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்: இரவு தங்கி வழிபட பக்தர்களுக்கு தடை விதித்த வனத்துறை..!!

விருதுநகர்: மகா சிவராத்திரியையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் மலையடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில். இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் சித்தர்கள் வாழும் பூமி என்று போற்றி வணங்கப்படுகிறது. மாதந்தோறும் சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய 4 தினங்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் முதல் வரும் 11ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்லலாம் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது. எனவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை 7மணி முதல் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் 4 கால பூஜைகள் விடிய, விடிய நடைபெறுகிறது. ஆனால் இந்த பூஜைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மலையேறிய பக்தர்கள் இன்று மாலை 4 மணிக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி விடவேண்டுமென வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.  அதே நேரத்தில் எதிர்பாராத மழை பெய்தால் சதுரகிரி மலைக்கு செல்லும் அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், கோடை காலம் என்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மகா சிவராத்திரி.. சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்: இரவு தங்கி வழிபட பக்தர்களுக்கு தடை விதித்த வனத்துறை..!! appeared first on Dinakaran.

Related Stories: