அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

சேலம், மார்ச் 6: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூருக்கு நேற்று முன்தினம் அதிகாலை அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை தலைவாசல் கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன் (52) ஓட்டிச் சென்றார். கண்டக்டராக சுதாகர் இருந்தார். பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றனர்.

அந்த அரசு பஸ், அதிகாலை 2.45 மணியளவில் ஆத்தூர் நரசிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகில் சென்றது. அப்போது ரோட்டில் நின்றிருந்த வாலிபர், திடீரென டிரைவர் சீட்டிற்கு அருகே பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை கல்லால் தாக்கி நொறுக்கினார். உடனே பஸ்சை நிறுத்திய டிரைவர் கிருஷ்ணன், பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர், அவரை ஆத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், ஆத்தூர் வளையமாதேவி தெற்குதெருவை சேர்ந்த செல்வம் மகன் அருண் (24) எனத்தெரியவந்தது. அவர் மீது பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

The post அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: