தமிழக பாஜ வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

வேளச்சேரி: வேளச்சேரி- தாம்பரம் மெயின் சாலை, விஜயநகரில் உள்ள பாஜ தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியே வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கேட்டு, படிவத்தில் எழுதி வாங்கினார். அப்போது, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

பின்னர், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்றைக்கு தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. அவர்கள் கருத்துகளை எங்களது தேர்தல் கமிட்டிக்கு நாளை கூற இருக்கிறோம். இதையடுத்து, நாடாளுமன்ற குழு முடிவை அறிவிப்பார்கள்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பாஜ கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் விருப்பமாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி 400க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. கூடிய விரைவில் தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி கட்டுமான பணி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.

The post தமிழக பாஜ வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: