நம் மீது சேறு வீச பார்க்கிறார்கள் 40 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

பெரம்பூர்: வாக்குகளுக்காக செய்யக்கூடிய அரசியலை நாம் செய்யவில்லை. நம் மீது சிலர் சேறு வீச பார்க்கிறார்கள். இவற்றை எல்லாம் உடைத்தெறிந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்கு பகுதி 67வது வட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலி ன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்” எனும் தலைப்பில் ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. பகுதி துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாவூத் பீ தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 271 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது, தங்கம் தென்னரசு பேசியதாவது:
சமுதாயத்தில் உள்ள அத்தனை பேருக்குமான ஆட்சியை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கலைஞரின் குடிசையில்லா தமிழகம் என்னும் கனவை நினைவாக்கும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். சமூகத்தாலும் பெற்றோர்களாலும் கைவிடப்பட்ட திருநங்கைகள் திருநம்பிகளை எண்ணிப்பார்த்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தாயின் உள்ளத்தை தனக்காக கொண்ட தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் மற்றும் அவர்களின் கல்வித்தேவைகளை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார்.

வடசென்னை என்றாலே தேர்தலில் வெற்றியை அள்ளித் தரக்கூடிய தொகுதி. வாக்குகளுக்காக செய்யக்கூடிய அரசியலை நாம் செய்யவில்லை. நம் மீது சிலர் சேறு வீச பார்க்கிறார்கள். இவற்றை எல்லாம் உடைத்தெறிந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்பி கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், மண்டல குழு தலைவர் சரிதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post நம் மீது சேறு வீச பார்க்கிறார்கள் 40 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: