ரூ.70 லட்சம் சொத்து வரி பாக்கி 150 கடைகள், 3 கட்டிடங்களுக்கு சீல்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 5வது மண்டலம் 56, 57 ஆகிய வார்டு பிரகாசம் சாலையில், கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. வீட்டின் கீழ்தளத்தில் 3 கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த கடைகளுக்கு பல ஆண்டாக வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ₹5 லட்சம் வரை பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் வரிசெலுத்தும்படி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனாலும் வரி செலுத்தாததால் நேற்று காலை 3 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுபோல் சந்திரம்மாள் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இதற்கும் சொத்து வரி செலுத்தாததால் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பிரகாசம் சாலையில் 11 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருந்த ஒரு வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. சென்ட்ரல் கண்ணப்பன் திடலில் உள்ள நேரு மார்க்கெட்டில் 150 கடைகள் நீண்ட நாள் சொத்து வரி செலுத்தாமல் 50 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்திருந்த காரணத்தால் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை போலீசார் துணையுடன் பூட்டி சீல் வைத்தனர்.

ராயபுரம் மண்டலத்தில் ₹70 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ள 150 கடைகள், 3 கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட வீடு மற்றும் கடை உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தினால் உடனடியாக சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 5வது மண்டலத்தில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தியேட்டரும் மூடல்
திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் எம்.எஸ்.எம். என்ற பிரபல திரையரங்கம் உள்ளது. இது, கடந்த 7 ஆண்டுகளாக ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் சொத்து வரி பாக்கி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. மாநகராட்சி வருவாய் துறை சார்பில், கடந்த பல மாதங்களாக நிலுவையில் உள்ள வரியை செலுத்த சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளருக்கு நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. மேலும் கடைசியாக, கடந்த வாரம் வரி செலுத்த கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும் வரி பாக்கியை செலுத்தவில்லை. திருவொற்றியூர் மண்டல முதுநிலை உதவி வருவாய் அலுவலர்கள் எம்.அர்ஜூனன், எஸ்.சுரேஷ், வரி மதிப்பீட்டாளர்கள், பெரோஸ் கான், சந்திரசேகர், சிவக்குமார், சீனிவாசன், உரிமம் ஆய்வாளர், தனலட்சுமி, வரிவசூல் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேற்று காலை, எம்.எஸ்.எம் தியேட்டரை மூடி சீல் வைத்தனர். உடனடியாக நிலுவையில் உள்ள வரிபாக்கியை செலுத்த வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் தொடர் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என, வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post ரூ.70 லட்சம் சொத்து வரி பாக்கி 150 கடைகள், 3 கட்டிடங்களுக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: