வேலைக்கு செல்லாததால் ஆத்திரம் கடப்பாரையால் கணவனை சரமாரியாக தாக்கிய மனைவி கைது: திருவள்ளூர் அருகே பயங்கரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு கூவம் காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு பாலச்சந்தர் (19), பவன் ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் திருமணமாகி கடம்பத்தூரில் வசித்து வருகிறார். இளைய மகன் பவன் 4ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சீனிவாசனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் அவர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் ராஜேஸ்வரி பிள்ளையார்குப்பத்தில் உள்ள தெர்மாகோல் கம்பெனியில் கடந்த 5 வருடமாக வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இதனிடையே ராஜேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவருடன் சீனிவாசன் அடிக்கடி சண்டைபோட்டு அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, குடும்ப செலவுக்காக வங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக சீனிவாசனை ஏதாவது வேலைக்கு போகச்சொல்லி ராஜேஸ்வரி கூறியுள்ளார். மேலும் மகன் பாலச்சந்தரும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருவதால் மகனையும் அவர் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், ராஜேஸ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் இரவு 10 மணியளவில் சீனிவாசன் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து, அவரது தலையில் ராஜேஸ்வரி பலமாக தாக்கியுள்ளார்.

அப்போது மகன் பாலச்சந்தர் அதனை தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதையும் மீறி ராஜேஸ்வரி சீனிவாசனை தாக்கினார். இதில் சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனது நண்பர் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது தந்தையை பாலச்சந்தர் அழைத்து சென்றார். அங்கு முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சீனிவாசனை அனுப்பி வைத்தனர். அங்கு சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தையை கடப்பாரையால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் ராஜேஸ்வரி மீது மகன் பாலச்சந்தர் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.
வழக்குப்பதிவு செய்து கணவனை கொலை செய்யும் நோக்கத்தோடு கடப்பாரையால் தாக்கிய ராஜேஸ்வரியை மப்பேடு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வேலைக்கு செல்லாததால் ஆத்திரம் கடப்பாரையால் கணவனை சரமாரியாக தாக்கிய மனைவி கைது: திருவள்ளூர் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: