தமிழ்நாடு அணியை வீழ்த்தி 47வது முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி!

மும்பை: ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி 47வது முறையாக மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு அணி 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து வெளியேறியது.

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டிநேற்று முன்தினம்(மார்ச்.02) தொடங்கியது. இந்த போட்டியில் தமிழ்நாடு – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக விஜய் ஷங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும், தாக்கூர், முஷீர் கான், தனுஷ் கோட்யான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து மும்பை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தமிழ்நாடு அணியை போலவே ஆரம்பத்தில் மும்பை அணியும் ரன் குவிக்க முடியாமல் திணறியது. இறுதியில் தாக்கூர் மற்றும் தனுஷ் கோட்யான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது.

தாக்கூர் 104 பந்துகளில் 109 ரன்களும், தனுஷ் கோட்யான் 126 பந்துகளில் 89 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை 378 ரன்கள் குவித்து 232 ரன்கள் முன்னிலை பெற்றது.

தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியடைந்து இறுதிப்போட்டிக்கு 47வது முறையாக முன்னேறி அசத்தியது. தமிழக அணியில் பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

The post தமிழ்நாடு அணியை வீழ்த்தி 47வது முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி! appeared first on Dinakaran.

Related Stories: