மக்களவைத் தேர்தல்.. 68ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3.32 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர்: சத்யபிரத சாகு!!

சென்னை: மக்களவைத் தேர்தலில் 68ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3.32 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர் என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதற்கான ஆயுத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சில நாட்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பல்வேறு வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் “ஓட்டு, ஓட்டுக்காக ஓட்டு” என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 68ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3 லட்சத்து 32,000 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர் என்று தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மக்களவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதி அறிவித்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படும். தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. என்று அவர் கூறியுள்ளார்.

The post மக்களவைத் தேர்தல்.. 68ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3.32 லட்சம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர்: சத்யபிரத சாகு!! appeared first on Dinakaran.

Related Stories: