அதிமுக உடன் கூட்டணிக்கு வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும்; வந்தால் வரவேற்போம்!: விசிக-வுக்கு கூட்டணி வலைவிரிக்கும் ஜெயக்குமார்..!!

சென்னை: அதிமுக உடன் கூட்டணிக்கு வந்தால் விசிக-வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்,

விசிக-வுக்கு கூட்டணி வலைவிரிக்கும் அதிமுக:

அதிமுக உடன் கூட்டணிக்கு வந்தால் விசிக-வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும், வந்தால் வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 மக்களவைத் தொகுதிகளை கேட்டு வருகிறது. 3 சீட்டுகளை தர திமுக மறுப்பதால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத சூழல் உள்ளது. திமுக கூட்டணியில் இழுபறி உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்குத்தான் லாபம்.

அதிமுக கூட்டணிக்கு வந்தால் கூடுதல் இடம் கிடைக்கும். நாங்கள் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கவில்லை. எங்களுக்கு என தனித்தன்மையும் அடையாளமும் உள்ளது. அதிமுக தனியே தேர்தலில் போட்டியிட்டும் சாதனை படைத்துள்ளது. அதேசமயம் கூட்டணி என்பதை இதர கட்சிகள் விரும்பும்போது எப்படி அவர்களை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியும்? திமுக கூட்டணியில் அதிருப்தி இருந்தால் அதிமுகவுக்கு வரலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வருகையால் தமிழக பாஜகவுக்கு பலன் கிடைக்காது:

பிரதமர் மோடியின் வருகையால் தமிழக பாஜகவுக்கு பலன் கிடைக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வருகை ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது திராவிட மண். வடக்கில் உள்ள கட்சிக்கு இங்கு எந்த வாய்ப்பு கிடைக்காது. நாங்கள் யாரையும் கூட்டணிக்கு வர கெஞ்சவில்லை. யார் வந்தாலும், கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும் என்றார்.

பாஜக குறித்து ஜெயக்குமார் விமர்சனம்:

காலி சேர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த பாஜக வெட்கப்பட வேண்டும். புதுச்சேரியில் பாஜக நிர்வாகி எம்ஜிஆர் படத்தையும், அம்மா படத்தையும் போட்டோ போட்டு ஓட்டு வாங்கலாம் என்று நினைக்கிறது. உங்க தலைவர் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லை எங்க தலைவர் போட்டோ பயன்படுத்துவதற்கு இப்படிப்பட்ட கீழத்தரமான ஒரு அரசியலை செய்வதற்கு என பாஜக அரசுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post அதிமுக உடன் கூட்டணிக்கு வந்தால் அதிக இடங்கள் கிடைக்கும்; வந்தால் வரவேற்போம்!: விசிக-வுக்கு கூட்டணி வலைவிரிக்கும் ஜெயக்குமார்..!! appeared first on Dinakaran.

Related Stories: