நாடாளுமன்ற தேர்தல் புதுவை தொகுதி வேட்பாளரை பாஜ விரைவில் அறிவிக்கும்

 

புதுச்சேரி, மார்ச் 4: நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் வேட்பாளரை பாஜ அறிவிக்கும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு முகாமை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், போலியோ சொட்டு மருந்து மிகவும் அவசியமான ஒன்று. புதுச்சேரியை சேர்ந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து சுகாதாரத்துறை மூலம் பல இடங்களில் போடப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் எதுவும் இல்லாமல் இருப்பதற்கு நல்லவாய்ப்பு. சுகாதாரத்துறை மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதன் வாயிலாக குழந்தைகளுக்கு நோய் வருவது தடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. விரைவில் வேட்பாளரை பாஜ அறிவிக்கும். பிரசாரம் செய்ய பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவார். போதை பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம் சரியாக நடந்து வருகிறது. இத்திட்டம் சரியாக சென்றடையவில்லை என கூறும் குற்றச்சாட்டு பொய்யானது, என்றார்.

The post நாடாளுமன்ற தேர்தல் புதுவை தொகுதி வேட்பாளரை பாஜ விரைவில் அறிவிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: