இலங்கையின் 3 தீவுகளில் மின் திட்டங்களை அமைக்கிறது பெங்களூரு நிறுவனம்: இந்தியாவின் எதிர்ப்பால் சீனா விலகியதை அடுத்து ஒப்பந்தம் கையெழுத்து!!

பெங்களூரு : இலங்கையில் கட்டமைக்கப்பட இருந்த மின்சார திட்டத்தில் இருந்து சீனா வெளியேறிவிட்ட நிலையில், அந்த திட்டத்தை நிறைவேற்ற இந்திய நிறுவனம் கைகோர்த்துள்ளது. யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டத்தை சீனாவின் உதவியுடன் அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் இருந்து 50 கிமீ தூரத்தில் மட்டுமே உள்ள இந்த தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதால் இந்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதே திட்டத்தை கடனுக்கு பதிலாக மானியத்துடன் செயல்படுத்த உதவி செய்வதாக இந்தியா தெரிவித்த யோசனையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது.

மார்ச் 2022ல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின் போது, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து கடும் விமர்சனங்களுடன் திட்டத்தில் இருந்து சீனா விலகியது. இந்த நிலையில் யாழ் தீபகற்பத்தில் நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவில் சுமார் ரூ.90 கோடி மானியத்துடன் இந்தியா நவீன மின் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி 530 கிலோ வாட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோ வாட் சூரிய சக்தி, 2400 கிலோ வாட் பேட்டரி பவர், 2500 கிலோ வாட் டீசல் பவர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதற்காக இந்தியாவின் யு சோலார் சல்யூஷன்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அரசு இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து யாழ் தீபகற்பத்தில் மின்சக்தி திட்ட கட்டுமான பணிகளை பெங்களூருவில் உள்ள யூ சோலார் நிறுவனம் விரைவில் தொடங்க உள்ளது.

The post இலங்கையின் 3 தீவுகளில் மின் திட்டங்களை அமைக்கிறது பெங்களூரு நிறுவனம்: இந்தியாவின் எதிர்ப்பால் சீனா விலகியதை அடுத்து ஒப்பந்தம் கையெழுத்து!! appeared first on Dinakaran.

Related Stories: