விரைவு கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு

 

ஊட்டி,மார்ச்2: நீலகிரி மாவட்டத்தில் விரைவு கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகரன் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தான் முதன் முதலில் அரசு பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அனைத்து வழித்தடங்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதால் முழுக்க முழுக்க அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது 335 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அவற்றில் 173 பஸ்கள் சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. 2018ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. மலைப்பகுதிகளில் 20 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க அரசாணை உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 20 சதவீதம் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் 80 கிமீ.,க்கு மேல் செல்லும் பஸ்களில் விரைவு கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இது மாவட்ட மக்களுக்கு பெரும் சுமையானது.

நீலகிரி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் பஸ் இயக்க வாய்ப்பு இல்லை என்பதால் அனைத்து பஸ்களுக்கும் சாதாரண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு மாவட்ட போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்துள்ளது.ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இதனை மறைத்து விரைவு கட்டணம் என்ற பெயரில் மக்களை சுரண்டி வருகிறது.

எனவே இந்த சட்டவிரோத கட்டண வசூலை ரத்து செய்யகோரி பல போராட்டங்களை நடத்தியும் பலன் கிடைக்காததால் இந்த கட்டண உயர்வை தடை செய்யக்கோரி குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது, என்றார்.

The post விரைவு கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: