பெங்களுரு ஓட்டலில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு: 9 பேர் காயம், என்.ஐ.ஏ தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் இந்திரா நகர், ஜே.பி.நகர், ராஜாஜி நகர், குந்தலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டலில், வழக்கமாகவே மதிய உணவு நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓட்டலில் கை கழுவும் வாஷ் பேசின் பக்கத்தில் மர்ம பையில் இருந்த 2 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. 10 நொடியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் மூவி (30), நவ்யா (25), ஸ்ரீநிவாஸ் (67), மோகன் (41), நாகாஸ்ரீ (35), பாலகிருஷ்ணன் (35), பாருக் (19), தீபான்ஷு (23), சொர்ணாம்பா (49) ஆகிய 9 பேரும் காயமடைந்தனர்.

இவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியை அடைத்து, தீவிர விசாரணையை தொடங்கினர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கர்நாடக மாநில காவல் துறை டிஜிபி அலோக் மோகன் மற்றும் பெங்களூரு மாநகர காவல் துறை ஆணையர் தயானந்த் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) அதிகாரிகள் குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

முதலில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பின்னர் பையில் இருந்த மர்மப்பொருள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெடித்தது வெடிகுண்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், இது குண்டுவெடிப்பு தான். ஆனால் மிகப்பெரிய அளவிலானது அல்ல. அந்த பையை ஓட்டலுக்குள் வைத்த நபர் யார் என்று சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த நபர் கவுன்டரில் டோக்கன் வாங்கியிருக்கிறார்.

பின்னர் பையை ஓரமாக வைத்துவிட்டு ஒட்டலில் இருந்து வெளியே சென்றுள்ளார். எனவே கேஷ் கவுன்டரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அந்த பையை வைத்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் டிவிட் செய்துள்ளார்.

* பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
ஓட்டலில் அடுத்தடுத்து 10 விநாடி இடைவெளியில் 2 குண்டுகள் வெடிக்கும் சி.சி.டி.வி காட்சிகளை பெங்களுரு போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளில் குண்டுகள் வெடித்ததும் எழுந்த புகைமூட்டம், இடிபாடுகளில் சிலர் சிக்கி கிடப்பது, மற்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் காண்போரை பதற வைக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post பெங்களுரு ஓட்டலில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு: 9 பேர் காயம், என்.ஐ.ஏ தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: