எப்போ நிதி தருவீங்க… பதில் சொல்லுங்க மோடி: டிரெண்டிங்கில் திரிணாமுல் பிரசாரம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்துவருகிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிதி எதையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் மொத்தம் 30 லட்சம் பேர் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள். இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ. 2,700 கோடியை பல்வேறு காரணங்களை கூறி தர மறுக்கிறது.

இதனால் மேற்கு வங்க அரசு தனது நிதியில் இருந்து 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் தந்து வருகிறது. இதே போல் வேறு சில திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு நிதி தரவில்லை. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க அரசு நிதியை பெற போராடி வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நேற்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சமூக வலைதளங்களில் நூதன பிரசாரத்தில் இறங்கியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்துக்கு எப்போ நிதி தருவீங்க, வரும்போது பதில் சொல்லுங்க மோடி என்ற இந்த பிரசாரம் டிரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

The post எப்போ நிதி தருவீங்க… பதில் சொல்லுங்க மோடி: டிரெண்டிங்கில் திரிணாமுல் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: