சிபிஐ விசாரணைக்கு அகிலேஷ் ஆஜராகவில்லை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் ஆஜராகவில்லை. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது சுரங்க துறையையும் சேர்த்து கவனித்து வந்தார். அப்போது 14 குத்தகைகளுக்கு அவர் அனுமதி அளித்து இருந்தார். இந்நிலையில் சுரங்கங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் நேற்று நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அகிலேஷ் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் ராஜ்பால் காஷ்யப் கூறுகையில், ‘‘அவர் எங்கும் செல்லவில்லை. லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்” என்று தெரிவித்தார்.

* பாஜவின் ஒரு பிரிவு
சிபிஐ சம்மன் குறித்து அகிலேஷ்யாதவ் கூறுகையில்,’தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகின்றன. பாஜவின் ஒரு பிரிவு போல் சிபிஐ செயல்படுகிறது. எனக்கு கிடைத்த கடிதத்திற்கு நான் பதில் அளித்துள்ளேன். மக்களவை தேர்தலில் உபியில் பா.ஜ நிச்சயம் தோல்வி அடையும். சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டதாலும், சிசிடிவி இருந்ததாலும் பாஜவின் திருட்டு மற்றும் கொள்ளை போன வாக்குகள் வெளிச்சத்திற்கு வந்தது’ என்றார்.

The post சிபிஐ விசாரணைக்கு அகிலேஷ் ஆஜராகவில்லை appeared first on Dinakaran.

Related Stories: