3 ஆண்டுகளில் 13,570 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

ராசிபுரம், பிப்.28: திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை நாமக்கல் மாவட்டத்தில் 13,750 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ராசிபுரத்தில் நடந்த சிறப்பு முகாமில் ராஜேஸ்குமார் எம்.பி., பெருமிததத்துடன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இதில், ₹5 கோடி மதிப்பில் 601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், ராஜேஸ்குமார் எம்.பி., வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம், பெண்கள் தொழிற்கல்வி படிக்க புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம், அரசுப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், இல்லம்தேடி கல்வித் திட்டம், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மக்களைத்தேடி அரசு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ‘‘மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் கீழ், பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், கலெக்டரின் சீரிய முயற்சியினால், நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி, வனத்துறை அமைச்சர் தொடர் முயற்சியினால், ராசிபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ₹854 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இதன்மூலம் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இதுபோல மக்கள் நலனுக்காக ஒவ்வொரு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியினை உறுதி செய்யும் வகையில், வருவாய்த்துறையின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழிமுறைகளை பின்பற்றி இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 13,570 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ₹5 கோடி மதிப்பில், 601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி பேசினார். கூட்டத்தில் பெண்கள் சிலர் பேசும்போது, நாங்கள் இந்த பட்டா வாங்க 40, 50 ஆண்டுகள் அலைந்து திரிந்து இன்று பட்டா பெற்று உள்ளோம். இதற்காக தமிழக முதல்வர், ராஜேஸ்குமார் எம்.பி., மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய அட்மா குழு தலைவர் துரைசாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் துரைசாமி, பேரூராட்சி தலைவர்கள் சுப்பிரமணி, ராஜேஸ், சின்னசாமி, கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், வருவாய் கோட்டாட்சியர்(பொ) முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், தாசில்தார் சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 3 ஆண்டுகளில் 13,570 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா appeared first on Dinakaran.

Related Stories: