திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் நகர திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகர திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேரடி வீதியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், துணைத் தலைவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிரதிநிதி ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘மார்ச் 3ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும்.  மதுராந்தகம் நகரில் அண்ணா பேருந்து நிலைய புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

நகர சுகாதார மையம் கட்டிடப் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது, 50 ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கையான மதுராந்தகம் பெரிய ஏரி தூர் வாரும் பணியும் நடைபெறுகிறது. இந்த நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்காக 5 கிணறுகள் தோண்டப்பட்டு குடிநீர் இணைப்பிற்காக குழாய் பதிக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.

மேலும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ள பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என மதுராந்தகம் நகரில் செயல்படுத்தப்பட்ட திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். இதில் நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: