ஆந்திர ரஞ்சி அணிக்காக விளையாடப் போவதில்லை: ஹனுமா விகாரி பகீர்!

அமராவதி: ஆந்திரா கிரிக்கெட் அணிக்காக இனி விளையாடப் போவதில்லை என ஹனுமா விகாரி அறிவித்துள்ளார். மாநில கிரிக்கெட் வாரியத்தால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். வீரர் ஒருவரை திட்டியதாகவும் அவர் அரசியல்வாதி ஒருவரின் மகனாக இருக்கவே, ஆந்திர கிரிக்கெட் வாரியத்திடம் புகாரளித்து, தன்னை கேப்டன்சியில் இருந்து விலக வைத்ததாகவும் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இந்த பதிவு மூலம் ஒரு சில விஷயங்களை முன்வைக்கிறேன். நான் பெங்காலுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கேப்டனாக இருந்தேன். அந்த ஆட்டத்தில் நான் ஒரு வீரரை நோக்கிக் கத்தினேன். அந்த வீரரின் தந்தை ஓர் அரசியல்வாதி. அந்த வீரர் தனது தந்தையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். எனவே அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட என்னை கேப்டன் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

நான் தனிப்பட்ட முறையில் அந்த வீரரை எதுவும் சொல்லவில்லை, இருந்தும் கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ஆந்திர அணியை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்ற, இந்தியாவுக்காக 16 டெஸ்டில் விளையாடிய என்னை விட அவரே முக்கியமானவராக கிரிக்கெட் சங்கத்திற்குத் தெரிந்தார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தாலும், அணியின் மேல் உள்ள மரியாதைக்காகத் தொடர்ந்து விளையாடினேன்.

என்ன சொன்னாலும் அதனை வீரர்கள் கேட்க வேண்டும் என கிரிக்கெட் சங்கம் நினைக்கிறது. நீண்ட நாள்களாக இது குறித்து நான் பேசாமல் இருந்தேன். என்னுடைய சுயமரியாதையை இழந்ததால் இனி ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன். நான் எங்கள் அணியை விரும்புகிறேன், ஆனால் வீரர்கள் வளருவதை கிரிக்கெட் சங்கம் விரும்பவில்லை” என ஹனுமா விகாரி தெரிவித்துள்ளார்.

The post ஆந்திர ரஞ்சி அணிக்காக விளையாடப் போவதில்லை: ஹனுமா விகாரி பகீர்! appeared first on Dinakaran.

Related Stories: