பல மாவட்டங்களில் கைவரிசை கோயில்களில் திருடிய பலே கொள்ளையன் கைது

*அம்மன் தாலி, வெள்ளி விளக்குகள் பறிமுதல்

திருவாரூர் : கோவை, திருப்பூர் உட்பட பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய பல கொள்ளையன் கோயில்களில் திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து அம்மன் தங்க தாலி, வெள்ளி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருவாரூர் மாவட்டம் குடவாசல் சித்தாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வரும் இவர், நேற்றுமுன்தினம் மாலை தனது குடும்ப செலவிற்காக 2 பவுன் செயினை அடகு வைக்க குடவாசல் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அப்போது சித்தாடி வடிவாய்க்கால் அருகே மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டன் வைத்திருந்த நகையை பறித்துள்ளார்.

இதில் மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அருகே கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த மர்மநபரை பிடித்து குடவாசல் போலீசில் ஒப்படைத்தனர். அந்த மர்மநபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் குடவாசல் பகுதியை சேர்ந்த குருவி (எ) குருசக்தி (35) என்பதும், குடவாசல் காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் அவரது பெயர் இருப்பதும் தெரியவந்தது. இதில் அவர் மீது திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இந்த வழக்குகளில் பிடிபடாமல் அவர் கடந்த 6 மாதமாக தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

குடவாசல் அருகே கொத்தங்குடி என்ற இடத்தில் புற்றடி மாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் தாலி மற்றும் குண்டு, தீபங்குடி ஆதி செல்வி மாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த தாலி மற்றும் குண்டு மற்றும் பல்வேறு கோயில்களில் விளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்களை திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து குருசக்தியை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து கோயில்களில் திருடப்பட்ட தாலி மற்றும் தாலிகுண்டுகள், வெள்ளி விளக்குகள், நடத்துனர் மணிகண்டனிடமிருந்து பறித்த 2 பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post பல மாவட்டங்களில் கைவரிசை கோயில்களில் திருடிய பலே கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Related Stories: