வேலையில்லா திண்டாட்டத்தால் தினமும் 12 மணி நேரத்தை வீணாக்கும் இளைஞர்கள்: செல்போன் பயன்பாடு குறித்து ராகுல் கவலை

சம்பால்: வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் தினமும் 12 மணி நேரத்தை செல்போனில் செலவழிக்கின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை, உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத், அம்ரோஹா வழியாக சம்பாலை அடைந்தது. ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் சென்றார். அவர்களை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அப்போது ராகுல்காந்தி பேசுகையில், ‘நீங்கள் உங்களது செல்போனை ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் பயன்படுத்துகிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு ஒருவர், ‘தினமும் 12 மணி நேரம் செல்போனை பயன்படுத்துகிறேன்’ என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை; அதனால்தான் 12 மணிநேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். பெரிய தொழிலதிபர்களின் மகன்கள் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில்லை. அவர்கள் 24 மணி நேரமும் பணத்தை எண்ணுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?. உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால், சுமார் அரை மணி நேரம் ரீல்ஸ் பார்த்துவிட்டு 12 மணி நேரம் வேலை பார்ப்பீர்கள்’ என்றார்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது’ என்றார். இந்நிலையில் ராகுல்காந்தியின் யாத்திரை இன்று ராஜஸ்தானின் தோல்பூரில் நுழைந்தது. நாளை மறுநாள் மற்றும் 28ம் தேதிகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்வில் ராகுல் காந்தி கலந்து கொள்வதால், நாளை முதல் மார்ச் 1ம் தேதி வரை ராகுல்காந்தியின் யாத்திரை இடைநிறுத்தப்படும். மார்ச் 2ம் தேதி தோல்பூரில் இருந்து மீண்டும் ராகுலின் யாத்திரை தொடங்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர்.

The post வேலையில்லா திண்டாட்டத்தால் தினமும் 12 மணி நேரத்தை வீணாக்கும் இளைஞர்கள்: செல்போன் பயன்பாடு குறித்து ராகுல் கவலை appeared first on Dinakaran.

Related Stories: